குரங்கு அம்மை பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை தொற்று நோய் இருந்து வருகிறது. ஆனால், கடந்த மே மாதத்திலிருந்து குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவது, உலக சுகாதார அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியதாவது:-

உலகில், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது. இதனால் குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறேன். இந்த முடிவிற்கு குழு உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்ற போதிலும், தற்போதைய அசாதாரண சூழலை கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. குரங்கு அம்மை பரவலை தடுக்க, உலக நாடுகள் தேவையான முதலீடுகள், ஆய்வுகள், சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவே இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.