கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அவசர நிலை அறிவிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பூங்காவில், ஓக் மரங்களில் சமீபத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கும் பரவியது. அந்த தீ, 48 சதுர கி.மீ., துாரத்துக்கு பரவி, நேற்று முன்தினம் மிகப்பெரிய காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போது வரை, அதை அணைக்க முடியவில்லை. இதில், அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. 6,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த மாகாண கவர்னர் கவின் நியூசோம் அவசர நிலையை அறிவித்துள்ளார். இது குறித்து, அமெரிக்க வனத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் பேட்டர்சன் கூறுகையில், “இந்த ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துகளில், இது மிக முக்கியமானது. 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள், விமானங்களில் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.