சென்னை மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர பஸ்களை படிப்படியாக தனியார் மயமாக்க தமிழக அரசு தீர்மானித்து இருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடம் இருந்து பறிப்பதற்கு வகைசெய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயக்கும் பஸ்களை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பஸ்களை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதை தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும். உலகில் மிகச்சிறப்பான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டிருக்கும் பெருநகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். 50 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தையும், பின்னர் படிப்படியாக பிற போக்குவரத்துக் கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
