எகிப்தில் தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி!

தேவாலயம் தீப்பிடித்ததில் ஒரே நேரத்தில் 41 பேர் பலியாகினர். மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், காப்டிக் தேவாலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் புகழ் பெற்ற தேவாலயங்களில், இதுவும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை அதிகமாக வெளியேறியதால் பொதுமக்களால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தேவாலயத்தின் ஜன்னல்களில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதும், தீயணைப்பு வீரர்கள் பெரும் பாடுபட்டு அதை அணைக்க முயல்வதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, மீட்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.