ஜெர்மனியில் உள்ள பனிப்பாறைகள் அடுத்த 15 ஆண்டுகளில் உருகி காணாமல் போய்விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனி, அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள 3 ஆயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நீண்டு செல்லும் ஆல்பஸ் பனிமலை தொடர்களில் உள்ள முக்கிய 5 பனிப்பாறைகளின் எதிர்காலம் மிக மோசமாக உள்ளதாகவும், அடுத்த 15 ஆண்டுகளில் அவை முற்றிலும் உருகி காணாமல் போகும் அபாயம் உள்ளதாக நியூனிக் நகரில் உள்ள பெவேரியன் அகாடமி ஆப் சயின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆல்பஸ் மலை தொடர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அவற்றில் பெரும்பாலான பனி பாறைகள், அடுத்த 50 ஆண்டுகளுக்குள்ளாக இருந்த இடம் தெரியாதவாறு காணாமல் போகக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் மிக உயர்ந்த மலையான ஜெர்பிக்சன் உச்சியில் அமைந்துள்ள முக்கிய பனிப்பாறை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேகமாக உருகி வருவதாகவும், பனியின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும், எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் நிலவிய அதீத வெப்ப அலை மற்றும் குறைந்த மழைபொழிவின் காரணமாகவே பனிப்பாறைகள் உருகும் வேகம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், பனிப்பாறையின் மேற்பரப்பில் மணல் மற்றும் தூசி படிந்ததும் பனி உருகுவதற்கு காரணமாக தெரிவிக்கின்றனர். சஹாரா பாலைவனத்தில் இருந்து வீசிய புழுதி புயலின் தாக்கத்தால் படிந்த தூசியே முக்கிய காரணம் என்கின்றனர்.
ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான “ஷ்னீஃபெர்னர்”, சமீப ஆண்டுகளாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த பனிப்பாறை தனது பெரும்பான்மையான பகுதியை இழந்துள்ளது.
இந்த ஆண்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்தியுள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது ஆல்பைன் பனிப்பாறைகள் உருகுவதை கொஞ்சம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.