அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 2011ஆம் ஆண்டு கோவை கவுண்டம்பாளையும் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுகுட்டி அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மாலை 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
திமுகவில் இணைந்த 50 ஆயிரம் பேரையும் வரவேற்கிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜி உங்களை வரவேற்றார். செந்தில் பாலாஜி வரவேற்றாலும் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நானும் வரவேற்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கலைஞர் சார்பிலும் நான் உங்களை வரவேற்கிறேன். ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று உங்களை அழைக்கிறேன். கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ என்று சொல்லிவிட்டு இங்கே வந்துள்ளீர்கள். மாற்று கட்சியில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்று மாற்றான் தாய் போல நடத்த மாட்டேன். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் போல செயல்படுவோம். தனி தாய் ஈன்ற உடன் பிறப்புகள் நாம். நீங்கள் வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்து இருக்கிறீர்கள்.
உங்களை இங்கே கொண்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள். செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள். 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள் என்று செந்தில் பாலாஜி சொன்னதும் வியந்து போனேன். செந்தில் பாலாஜி நான் வியந்ததை பார்த்து என்னிடம் 50 ஆயிரம் பேரின் பட்டியலையே கொடுத்தார். எல்லோருடைய பெயர், போன் நம்பரோடு செந்தில் பாலாஜி என்னிடம் லிஸ்டை கொடுத்தார்.
இங்கே கட்சி தொடங்கியதும் இங்கே அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்கிறார்கள். கட்சி தொடங்கும் முன்பே நாங்கள்தான் முதல்வர் என்கிறான். திமுக கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் கழித்துதான் ஆட்சிக்கு வந்தோம். நாம் செய்யாத சாதனைகள் இல்லை. நாம் பார்க்காத சோதனைகள் இல்லை. நாம் படாத துயரங்கள் இல்லை. நாம் இப்போதும் நிலைத்து நிற்க காரணம் நாம் கொள்கை காரர்கள் என்பதால்தான். திராவிடம் எனது எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க கூடிய கொள்கை. அதன் திராவிடமாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது. ஓராண்டில் நாம் ஏகப்பட்ட சாதனைகளை செய்து இருக்கிறோம். இந்த சாதனைகள் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தலைமை உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டின் நல்லாட்சி தொடர்வதற்கு இந்த பொள்ளாச்சி வழிவகுக்கும். நோட்டாவோடு போட்டி போடும் சில இயக்கங்கள் உள்ளன. முழங்கால் தண்ணீரில் படகு ஓட்டி நாடகம் போடும் நபர்கள் உள்ளனர்” என பாஜகவையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தமிழகம் வாழ வேண்டும் என்றால் தளபதிதான் ஆளவேண்டும். கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய கட்டிய ஈட்டிகளாய் திரண்டு இருக்கும் திராவிட சொந்தங்களே, எந்நாளும் முதல்வர் பாதையில் வழிநடப்போம். ஒற்றை செங்கல் கொண்டு செங்கோல் வென்ற சின்னவர் சொல்கொண்டு நமது லட்சியத்தை வென்றிடுவோம். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் சிந்திக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு இலவசங்களை வேண்டாம் என்கிறது. ஆனால் பெண்கள் பயனடைய வேண்டும் என நம்முடைய முதலமைச்சர் மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதியை உருவாக்கினார். மீண்டும் ஒன்றிய அரசு இலவசங்களை வேண்டாம் என்கிறது, ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அதேபோல கல்லூரி பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை முதலமைச்சர் வழங்குகிறார். ஆனால் மீண்டும் ஒன்றிய அரசு இலவசங்கள் கூடாது என்றுதான் சொல்கிறது. இதையெல்லாம் பார்த்து மக்களாகிய நீங்கள் தமிழக பாஜவினரிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. திமுக அரசு எங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளது. ஆனால், ரூ.410க்கு விற்ற சிலிண்டர் இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏன் விற்கிறது என்பதுதான் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி.
அது மட்டுமல்லாது 54 ரூபாய்க்கு விற்ற டீசல் இன்று நூறு ரூபாயை தொடும் அளவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறதே எந்த முகத்தை கொண்டு நீங்கள் தமிழ்நாட்டில் பிச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்திட எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக முழு வெற்றியை பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும். புதிதாக இணைந்தவர்கள் இதற்கான பணியை ஆற்றிட வேண்டும்.
அதேபோல சில குறிப்பிட்ட பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு சிலர் அதில் அரசியல் செய்ய நினைக்கின்றனர். குறிப்பாக ஆழியாறு பிரச்னை. இந்த கூட்டத்தில் வைத்து சொல்கிறேன். இந்த பிரச்னைக்கு நிச்சயம் முதலமைச்சர் தீர்வு காண்பார். இதற்காக போராட வேண்டாம். போராடினால்தான் இந்த அரசு நமக்கு செய்யும் என்று இல்லை. போராடாமலேயே அரசு நமக்கு பல விஷயங்களை செய்துள்ளது. அதுபோலவே இந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.