சென்னையில் கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி!

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான யோரா டேட் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிக் பாக்ஸிங் போட்டி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி நடந்த போட்டியில் மகாராஷ்டிரா வீரர் கேசவ் முடேலும், அருணாச்சலப்பிரதேச வீரர் யோரா டேட் ஆகியோரும் பலப்பரீட்சை நடத்தினர். அப்போது கேசவ் கொடுத்த கிக்கை கணிக்க முடியாமல் யோரா டேட் தவற, அந்த உதை அவரது தலையில் பட்டது. இதில் யோரோ டேடுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரோகித் யோரா டேட்டுக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த வீரருக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கினார். இந்த சம்பவம், கிக் பாக்சிங் விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.