அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் அவ்வப்போது இனவெறி தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுவது வழக்கம். கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள், ஜெர்மானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்டோர் மீது இந்த இனவெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பல நேரங்களில் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்கின்றனர் என்பது அமெரிக்கர்கள் சிலரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த எண்ணம் வெறுப்பாக மாறுவதன் காரணமாகவே இதுபோன்ற இனவெறி தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியர்கள் மீது நேற்று முன்தினம் இரவு இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஒரு வணிக வளாகத்துக்கு அருகே 4 இந்திய – அமெரிக்க பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மெக்சிகன் – அமெரிக்க பெண் அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை பார்த்த இந்தியப் பெண்கள், “ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், “நான் உங்களைப் போன்ற இந்தியர்களை வெறுக்கிறேன். எங்கு சென்றாலும், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். நான் மெக்சிகன் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவள். நீங்கள் அமெரிக்காவில் பிறந்தீர்களா? பிறகு உங்களுக்கு இங்கு என்ன வேலை? உங்கள் நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்கிற பொழுது அமெரிக்காவுக்கு ஏன் வருகிறீர்கள்?” எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் மிக மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.
ஆனால், இந்தியப் பெண்கள் பதிலுக்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. “தேவையற்ற வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்” எனக் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீ யார் எனக்கு உத்தரவிடுவது எனக் கூறிக்கொண்டே இந்தியப் பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு இந்தியப் பெண்கள் கூறினர். அப்போது தனது கைப்பையில் இருந்த துப்பாக்கியை அந்தப் பெண் எடுத்தார். மேலும், செல்போனில் வீடியோ எடுக்காதீர்கள் என அவர் மிரட்டினார். ஆனால் தொடர்ந்து இந்தியப் பெண்கள் அவரை வீடியோ எடுத்ததால் அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.
இந்த வீடியோவை இந்தியப் பெண்கள் சமூக வலைதளங்களில் நேற்று பதிவிட்டனர். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த டல்லாஸ் நகர போலீசார், இனவெறி தாக்குதல் நடத்திய பெண்ணை நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் எஸ்மெரால்டா என்பது தெரியவந்தது. அவர் மீது தாக்குதல், உடல்ரீதியாக காயப்படுத்துதல், தீவிரவாத மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 10,000 டாலர் (சுமார் ரூ.7.98 லட்சம்) அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்கள் கல்வியால், முறைப்படியான விசா நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். ஆனால் மெக்சிகோ நாட்டின் பெரும்பாலானவர்கள், கள்ளத்தனமாக எல்லைகளை கடந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆவர். அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் இனவெறி தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.