கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டதாக 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ3.73 கோடி மதிப்பில் பணிமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும். தமிழகத்திலேயே சிறை துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ததின் அடிப்படையில், சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.