கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அனுமதி மறுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்தவர் கபில் சிபல். அத்துடன் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி வந்தார். சில வாரங்கள் முன்பாக அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். இந்த நிலையில், இவர் கடந்த மாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை காட்டமாக விமர்சித்திருந்திருந்தார். அதாவது. “நீதி கிடைக்கும் என்று உச்சநீதிமன்றத்துக்கு சென்ற பின்னர் அவநம்பிக்கையை ஏற்படுகிறது. இயல்புக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. 50 ஆண்டுகால என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் இதை தெரிவிக்கிறேன். முக்கியமான, சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் எல்லாம் சில நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய நீதிபதிகள் என்ன தீர்ப்பை வழங்குவார்கள் என்பது எளிதில் தெரிந்துவிடும்” என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

குஜராத் கலவர வழக்கு கடந்த மாதம் 2002 குஜராத் கலவரத்தின் பின்னால் பெரும் சதி இருப்பதாக ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சட்டவிரோத பணிபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதற்கு எதிராக வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பையும் விமர்சித்து கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி கபில் சிபல் இவ்வாறு பேசினார்.

கபில் சிபலின் இந்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், வினித் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் கபில் சிபல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்திட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கோரினார். ஆனால், அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடைய ஒப்புதல் தேவை.

இந்த நிலையில் இதுகுறித்து வினித் ஜிண்டாலுக்கு கே.கே.வேணுகோபால் எழுதிய கடிதத்தில், “கபில் சிபலின் கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தில் இல்லை. அது நியாயமான கருத்திற்குள்ளேயே வரும். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் செயல்படத்தப்படுவதில்லை என்பதையே குறிக்கிறது. அது நீதிமன்றம் மீது அவதூறாக இல்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.