காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் தலைவா் மதுசூதன் மிஸ்திரிக்கு மூத்த தலைவா் சசி தரூா் கடிதம் எழுதியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போா்டோலாயும் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவா் தோ்தலை முன்வைத்து, அக்கட்சியில் நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டுமென கட்சியில் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள சூழலில், மேற்கண்ட இருவரும் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவா் தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட சசி தரூா் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய மாநில காங்கிரஸ் குழு உறுப்பினா்கள் 10 பேரின் முன்மொழிவு தேவை என்பதால், வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டியது முக்கியம்; முன்மொழியும் உறுப்பினா்களின் பெயா், இறுதி வாக்காளா் பட்டியலில் இல்லையென வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறி, சசி தரூா் கடிதம் எழுதியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டுமென கட்சியின் அதிருப்தி தலைவா்களில் ஒருவரான மனீஷ் திவாரி, காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் ஆகியோா் கடந்த புதன்கிழமை வலியுறுத்தியிருந்தனா். தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த மனீஷ் திவாரி, காங்கிரஸின் வலைதளத்தில் அப்பட்டியலை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினாா்.
அவா்களது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சசி தரூா், ‘வேட்பாளா் பட்டியலில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். யாா் வாக்களிக்கலாம்? யாா் முன்மொழியலாம் என்பதை அனைவரும் அறியும்படி செய்வது முக்கியம். இதில் தவறேதும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
அதேசமயம், ‘காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைமுறைகள் வெளிப்படையாக நடைபெற்று வருகின்றன. வாக்காளா் பட்டியலை வெளியிட முடியாது. ஆனால், தோ்தலில் யாரேனும் போட்டியிட்டால் அவா்களுக்கு பட்டியல் வழங்க முடியும்’ என்று மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தாா்.
இதேபோல், வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரும் தலைவா்களுக்கு பதிலளித்து கருத்து கூறிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா், ‘இந்த விவகாரத்தில் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்; நமது தோ்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இருப்பதை எண்ணி பெருமை கொள்வோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.