பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லை செய்யும் விதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வருவது அதிகமாகி உள்ளது. இதனை யூடியூபில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால், இந்த பிராங்கை பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தி அவர்களின் சுதந்திரத்தை கெடுக்கின்றனர். சில வீடியோக்களில் பொதுவெளியில் முகம்சுழிக்கும் வண்ணம் பெண்களிடம் எதேச்சையாக நடப்பதுபோன்று தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரிகமாக நடிக்கிறார்கள். திடீரென நிகழும் வரம்பு மீறிய செயல்களானது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக அதிர்ச்சியையும், மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது. இது போன்று பதிவிடுவது தனிமனித சுதந்திரத்தை கெடுக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்திருந்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையை மீறி, கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் பிராங்க் வீடியோவை வெளியிட்டது. இதனால் பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையிலும் வீடியோ எடுத்து வெளியிட்டதாக கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிராங்க் வீடியோ தொடர்பாக பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் கோவையில் இருந்து செயல்பட்டு வந்த கோவை 360 டிகிரி சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதில், கோவை மாநகர காவல் ஆணையர் .V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தது. இந்த நிலையில், “கோவை 360 டிகிரி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து “கோவை 360 டிகரி” என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்து, அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி “கோவை 360 டிகிரி” என்ற யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.