பிறர் பேசுவதை மட்டுமே கேட்கப் போகிறோம் என்பதற்கு, பாரத் ஜோடோ யாத்திரை ஒன்றும், ‘மன்கி பாத்’ போன்றதல்ல. பேச்சு, போதனை, நாடகம் என, எதுவும் இந்த யாத்திரையில் இருக்காது என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
ஜோடோ யாத்திரையானது, ஒருவர் பேசுவதை மட்டுமே, மற்ற அனைவரும் கேட்பது போன்ற, பிரதமர் மோடி நடத்தும், ‘மன்கி பாத்’ வகை நிகழ்ச்சி கிடையாது. இதில், வாய் நீளப் பேச்சுகள் இருக்கப் போவதில்லை; போதனைகள் எதுவும் இருக்காது; நாடகத்தனமான எந்த விஷயமும் இருக்காது. பொது மக்கள் பேசுவதை, காது கொடுத்து கேட்கவே, இந்த யாத்திரை.
நாடு பிளவுபட்டு கிடக்கிறது. முதலாவதாக, பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் பிளவுபட்டு கிடக்கிறது. அடுத்ததாக, சமூக ரீதியாக பிளவுபட்டு கிடக்கிறது. மூன்றாவதாக, மாநிலங்களின் அரசியல் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு, அவை அனைத்துமே ஓரிடத்தில் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. எனவே, நாட்டை ஒன்றுபடுத்தியாக வேண்டிய தேவை தற்போது உள்ளது. இதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையை, ராகுல் தலைமையேற்று நடத்தவில்லை. அதேநேரம், மற்றவர்களுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல், அவர்களோடு சேர்ந்து, மக்களின் பிரச்னைகளுக்காக குரல் எழுப்புவார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். யாத்திரையை துவங்குவதற்கு முன், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், ராகுல் வழிபடுவார். கன்னியாகுமரி துவக்க நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர், காதி துணியிலான தேசியக் கொடியை ராகுலிடம் அளிப்பர். தினமும் 22 – 23 கி.மீ., துாரம் வரை நடைபயணம் இருக்கும். காலை நடைபயணத்தில் குறைந்த எண்ணிக்கையில் தான் பங்கேற்பர்; மாலையில் தான் அதிகம் பேர் பங்கேற்பர். இந்த பிரதான பாதயாத்திரை நடக்கும் நேரத்தில், அசாம், திரிபுரா, பீஹார், மேற்கு வங்கம், ஒடிசா, சிக்கிம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், மாநில அளவிலான யாத்திரை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.