மதுபான மோசடி: 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி கலால் கொள்கை தொடர்பாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், சிபிஐ பரிசோதனையில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் எதிர்கட்சிகளை அச்சுறுத்த சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக மணீஷ் சிசோடியா கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி கலால் கொள்கை தொடர்பாக டெல்லியில் பல்வேறு இடங்களிலும், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுபானம் விற்க ஒப்பந்தம் செய்த வணிகர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. அதேநேரத்தில், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.