அண்ணா நூலகம் இந்தியாவின் பெருமை: அரவிந்த் கெஜ்ரிவால்!

அண்ணா நூற்றாண்டு நூலகம் சுற்றிப்பார்த்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும், அதை கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசுப் பள்ளி மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக அரசின் பள்ளிக்கல்வி தொடர்பான விவகாரங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. அதன்பின்னர் கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டு நூலகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். 2010ம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த தூலகம் 3.75 லட்சம் சதுரடியில் 8 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.
இந்நூலகத்தின் முக்கிய சிறப்பம்சமாக உலக இணைய மின் நூலகத்துடனும், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 6.2 லட்சம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

இதனைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக முனைவர் வேலு சரவணன் செய்து காட்டிய கடல் பூதம் நிகழ்ச்சியை பார்வையிட்டார்கள். தொடர்ந்து ஆறாம் தளத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, ஏழாம் தளத்தில் உள்ள ஓலைச் சுவடி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், நூலகத்தின் எட்டாம் தளத்தில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. அதேபோல் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட பின்பு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், அண்ணா நுற்றாண்டு நூலகத்தைப் பார்வையிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.