இந்திய-வங்கதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

4 நாட்கள் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று டெல்லி வருகை தந்தார். வங்கதேச அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக பிரநிதிகள் குழுவும் இந்தியா வருகை தந்துள்ளது. டெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விவகாரம், எல்லை தாண்டிய ஊடுருவல் சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது ஷேக் ஹசீனாவுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா, இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக போக்குவரத்து இணைப்புகள், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதில், போதை பொருள் கடத்தல்களை தடுப்பது, ஆள் கடத்தல்களை தடுப்பது போன்ற ஒப்பந்தங்களும் இதில் அடக்கம். வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே பல்வேறு நீர்நிலைகள் இருப்பதால் நீர் மேலாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதை தவிர, தொழில் நுட்பம், விஞ்ஞானம் போன்றவற்றில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தி அதன் மூலமாக அமைதி மற்றும் வளர்ச்சி வழிகொள்வது போன்ற பல்வேறு கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

இன்று காலை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு குடியரசு தலைவர் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் உடனான பேச்சுவார்த்தை முடிந்தது. பிறகு இன்று மாலை குடியரசு தலைவர் திரெளவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் சந்திப் சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். எனவே, இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா மற்றும் வங்கதேசம் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் ஷேக் ஹசீனா பேசியதாவது:-

இந்தியா எங்களது நட்பு நாடு. இந்தியாவுக்கு நான் வருகை தரும் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரக் கூடியது. வங்கதேசத்தின் விடுதலைக்கான இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவுகூருவோம். இந்தியாவும் வங்கதேசம் நல்லுறவுடன் உள்ளன. இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. வங்கதேச மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் தெற்காசியாவும் மேம்பாடு அடையும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.