தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, நெல்லையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திய நாட்டின் விடுதலைக்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்செந்தூர் கோவிலில் எனது மகனுக்கு முடிகாணிக்கை செலுத்துவதற்கு சென்றிருந்தோம். அங்கு முருகபெருமானிடம் என்னுடைய 2 பிள்ளைகளையும் கொடுத்து அவரிடம் தவிடு, சர்க்கரை வழங்கி, மீண்டும் எனது மகன்களை வாங்கி வருகிறேன். அங்கு சமஸ்கிருதத்தில் வேதம் ஓதிய அர்ச்சகர்களை நியமித்தது இந்து அறநிலையத்துறை தானே? அங்கு நான் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறியவுடனே தமிழில் அர்ச்சனை செய்தார்கள். ஓதுவார்கள் பாடல் பாடினார்கள். இது யாருக்கும் தெரியவில்லையோ? நான் முதல்-அமைச்சராக வந்தால் தமிழர் சமய அறநிலையத்துறை என்று மாற்றி விடுவேன். எனக்கு தமிழ் சொல்லித்தர இங்கு யாருக்கும் அருகதை இல்லை.
தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்வது இங்குள்ள அமைச்சர்களுக்கு நன்றாக தெரியும். இதனால்தான் அமைச்சர் கல்குவாரி உரிமையாளர்கள் என்னை வந்து பார்த்தால் அபராத தொகையை குறைத்து இருப்பேன் என்று பேசுகிறார். கனிமவளங்களை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.696 கோடி பணத்தில் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்தலாம். இந்த பணத்தை புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பது கொச்சைப்படுத்துவது போன்று உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் ஊழல் நிறைந்த ஆட்சியே காரணம். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது. சென்னையில் இருந்து நாடு முழுவதும் சாலை மோசமாகத்தான் உள்ளது. புதுடெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கல்வித்தரத்தை உயர்த்தி உள்ளார். இவர் அவர் கூறினார்.