டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க 2023 ஜனவரி 1 வரை தடை!

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஜனவரி 1 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் பட்டாசு வெடிக்க, விற்க, சேமித்து வைக்க 1 ஜனவரி 2023 வரை தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரி 1, 2023 வரை டெல்லியில் அனைத்து விதமான பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. காற்று மாசுபாட்டிலிருந்து மக்களை காக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனை / விநியோகத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டிபிசிசி மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 முதல் பட்டாசு வெடிப்பதற்கான தடை தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.