கர்நாடக மூத்த அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி(61) மாரடைப்பால் இன்று காலமானார்.

பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர், நேற்று இரவு வீட்டில் உணவு அருந்திய பின்பு குளியறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது அமைச்சர் உமேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்த அமைச்சர் உமேஷ் கட்டிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உமேஷ் கட்டிக்கு உடலில் நாடிதுடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி கேட்டதும் மாநில அமைச்சர்கள் பலர் உடனுக்குடன் மருத்துவமனைக்கு சென்றனர். உமேஷ் கட்டிக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி நேரில் ஆய்வு செய்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் இவருக்கு அவசர சிகிச்சை கொடுத்தும் பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உமேஷ் கட்டி மரணத்திற்கு பாஜக தலைவர்கள்., கர்நாடகா அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டி உடலை பார்த்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொம்மை, நான் என் நண்பனை இழந்துவிட்டேன். என் நெருக்கமான நண்பர் இன்று என்னுடன் இல்லை. இந்த மாநிலம் ஒரு சிறந்த அமைச்சரை இழந்துவிட்டது. ஒரு நல்ல அரசியல் தலைவரை இழந்துவிட்டது. அவர் எனக்கு சகோதரர் போன்றவர். இரங்கல் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்தன. உடலில் சில நோய் குறைபாடுகள் இருந்தன. ஆனால் அவர் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவார் என்று நினைக்கவில்லை. அவர் பல துறைகளை சிறப்பாக கவனித்துக்கொண்டார். அவர் மிக சிறந்த அரசியல் தலைவர். இந்த மாநிலத்திற்காக நிறைய செய்து இருக்கிறார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று முதல்வர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார்.