உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது, உக்ரைனுடன் போர் நடத்தி வரும் ரஷ்யா ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி பயன்படுத்தியது. தற்போது ரஷ்யாவிடம் ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறை நிலவுவதால் ஆயுதங்கள் , தளவாடங்கள் இல்லாமல் ரஷ்யா தவித்து வருகிறது. இந்த நிலையில் வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கி குவிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையே பல முறை கடித போக்குவரத்து நடந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-
உக்ரைனில் போா் நடைபெற்று வரும் நிலையில், தனது ராணுவத்துக்குத் தேவையான அளவுக்கு ராக்கெட் குண்டுகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை ரஷ்யாவால் தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள தடை காரணமாக, ஆயுதங்கள் தயாரிப்பதற்குத் தேவையான உதிரி பாகங்களை வெளிநாடுகளிலிருந்து ரஷ்யாவால் இறக்குமதி செய்ய முடியாததால் இந்த நிலை நீடித்து வருகிறது. எனவே, பெரும்பாலான நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவிடமிருந்து ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட லட்சக்கணக்கன தொலைதூர தாக்குல் ஆயுதங்களை ரஷ்யா வாங்கிக் குவித்து வருகிறது.
உக்ரைன் போா் தொடா்ந்து நீண்டு வருவதால், எதிா்காலத்தில் வட கொரியாவிடமிருந்து மேலும் ஆயுதங்களை வாங்க வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்படும். ஏற்கெனவே, போரில் ஈடுபடுத்துவதற்காக ஈரானிடமிருந்து தாங்கள் வாங்கி வரும் ஆளில்லா விமானங்களின் முதல் தொகுதியை ரஷ்யா கடந்த வாரம் பெற்றது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு இலக்காகியிருக்கும் ஈரான், வட கொரியா ஆகிய இரு நாடுகளுமே, உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்ததற்குப் பிறகு அந்த நாட்டுடன் தங்களது உறவை மேலும் வலுப்படுத்த முயன்று வருகின்றன. இந்தப் போருக்கு அமெரிக்காதான் காரணம் என்று குற்றம் சாட்டி வரும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், அமெரிக்காவின் வல்லாதிக்கக் கொள்கையால்தான் உக்ரைன் மீது ரஷ்ய அதிபா் விளாதிமீா் போா் தொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறி வருகிறாா்.
முன்னதாக, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தனி நாடுகளாக வட கொரியா கடந்த மாதம் அங்கீகரித்தது. அப்போது, ரஷ்யாவும் வட கொரியாவும் தனது கூட்டுறவை விரிவுபடுத்த வேண்டும் என்று விளாதிமீா் புதின் கூறியதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், வட கொரியாவிடமிருந்து லட்சக்கணக்கில் ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை ரஷ்யா வாங்கிக் குவித்து வருவதாக அமெரிக்க உளவுத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், அந்த நாட்டின் எண்ணெய் வருவாய் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாத போா்க் காலத்தில் மட்டும் படிம எரிபொருள் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 15,800 கோடி யூரோ (சுமாா் ரூ.12.47 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இருந்தாலும், ரஷ்யாவின் ஆயுதத் தளவாட உற்பத்தித் திறனை மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை வட கொரியாவிடமிருந்து அந்த நாடு ஆயுத கொள்முதல் செய்வது உணா்த்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.