பிரதமரின் புதிய இல்லத்துக்கு ‘குழப்பமான மடம்’ என்று பெயர் வைக்கலாம்: திரிணாமுல் எம்பி

டெல்லியில் உள்ள ‛ராஜபாதை’யின் பெயர் ‛கடமை பாதை’ என அழைக்கப்படும் என மத்திய அரசு கூறிய நிலையில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்துக்கு ‛குழப்பமான மடம்’ என பெயரிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள சில இடங்களில் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2015ல் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயரானது லோக் கல்யாண் மார்க் என மாற்றப்பட்டது. மேலும் அவ்ரங்கசிப் சாலையானது முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது வெளிப்படுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர், ‛‛ இந்தியாவில் காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை மாற்ற வேண்டும்” என கூறியிருந்தார். அதன்படி டெல்லியின் ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் புல்வெளிப் பகுதியை கர்தவ்ய பாதை (கடமை) என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது.

இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக பெயர்களை மாற்றாமல் கடமையை சரியாக செய்யுங்கள் எனும் பொருள்படும்படி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில், “ராஜபாதையை கர்தவ்ய பாதையாக மாற்றியது சிறந்து முடிவுதான். இது உங்கள் அனைவருக்குமே மக்கள் சேவை என்பது ஆட்சி உரிமை அல்ல, கடமையை ஆற்றுவதே என்பதை புரியவைக்கும்” என கூறியிருந்தார்.

இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இங்கே என்ன நடக்கிறது? நமது கலாசாரத்தை, பாரம்பரியத்தை மாற்றுவதையே பாஜக தனது ஒரே கடமையாக கொண்டிருக்கிறது. வரலாற்றை மாற்றி அதிகாரத்தைத் திணிக்கும் பித்து நிலையில் பாஜக உள்ளது” என காட்டமாக விமர்சித்து இருந்தார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், ‛‛டெல்லி ராஜபாதையை, கடமை பாதையாக மாறியுள்ளதாக அறிகிறேன். பிரதமரின் புதிய அதிகாரபூர்வ இல்லத்திற்கு ‘கிங்கர்தவ்யவிமுத் மடம்’ என்று பெயரிடுவார்கள் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார். கிங்கர்தவ்யவிமுத் மடம் என்றால் தமிழில் ‛குழப்பமான மடம்’ என பொருள்படும். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைக்கப்படும் பிரதமரின் இல்லத்தை குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.