ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்!

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு, நேற்று முன்தினம் ஜப்பானுக்கு வந்தார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர். பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா – ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் ராணுவ அமைச்சர் யசுகாசு ஹமாடா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.