உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்று உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டுப் பேசினார். நேருவை மறைமுகமாகச் சாடிய யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி நாட்டின் பாரம்பரியத்தை நினைத்துப் பெருமைப்படுபவர் என்று குறிப்பிட்டார். இப்படி பாரம்பரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுவது மட்டுமின்றி நாட்டை வளமான தேசமாக மாற்றுவதிலும் அவர் உறுதியாக உள்ளார். மோடி@20 என்ற புத்தக வெளியீட்டு விழாவில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசினார். அவர் மேலும் பேசியதாவது:-
நமக்கு முன்பு ஒருவர் பிரதமராக இருந்தார். அவர் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ளாத ஒருவர், ஆனால், நமக்கு இப்போது கிடைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக மாற்றத் தொடர்ந்து உழைத்து வருகிறார். பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் உலகிற்கே பிரதமர் மோடி தான் எடுத்துக்காட்டாக உள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தின் வேரை நிரந்தரமாக ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை. இதுவே பிரதமர் மோடியின் தலைமைப் பண்பிற்கு ஒரு சான்று. சோம்நாத் கோவிலைப் புனரமைக்கும் பணிகளுக்கே குடியரசைத் தலைவரை அனுப்பாத ஒரு பிரதமரைப் பார்த்தோம். ஆனால் இன்று அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணியை அவரே நேரடியாகத் தொடங்கி வைத்த பிரதமரை நாம் கொண்டு இருக்கிறோம்.
இப்போது உலகிலேயே ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து உள்ளது. இதுவே பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமைக்கு ஒரு மாபெரும் சான்று. அதிலும் குறிப்பாக சுமார் இருநூறு ஆண்டுகள் நமது நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி, நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளோம். இதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இன்று உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி செய்த நிர்வாகப் பணியை அடிப்படையாகக் கொண்டது தான் இந்தப் புத்தகம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.