முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீடுகளில் சோதனை நடந்து வரும் நிலையில், அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தும், போராட்டம் செய்து வருகின்றனர். இதனால், வேலுமணி வீட்டின் முன்பு பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியிடம் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வேலுமணி திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அவர் தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.

வேலுமணி வீட்டில் ரெய்டு என்ற தகவல் வெளிவந்ததையடுத்து, அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் வேலுமணி வீட்டின் முன்பு காலையில் இருந்து குவியத் தொடங்கினர். வேலுமணி ஆதரவாளர்கள் திரண்டு வந்ததால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். “சோதனை நடந்து வருவதால், இந்த பகுதியில் இருக்கக்கூடாது, கிளம்புங்கள்” என்று அறிவுறுத்தி உள்ளனர். அதற்கு ஆதரவாளர்களோ, “எங்களை அனுப்ப முடியாது.. எங்கள் தலைவருக்கு ஆதரவாக நாங்கள் இங்கேயேதான் இருப்போம்” என்று சொல்லி, கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தரையில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர். மேலும் காவல்துறைக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர். இதையடுத்து, போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

‘உங்கள் விசாரணை, ரெய்டுகளை நீங்கள் நடத்துங்கள். அதில் நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம்.. எங்கள் முன்னாள் அமைச்சருக்கு ஆதரவு தருவதற்காக இங்கேயே இருக்கிறோம்’ என்று வாக்குவாதம் செய்தனர். இத்துடன் வேலுமணி வீட்டில் 3 முறை ரெய்டுகள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆதரவாளர்கள் இப்படி திரண்டு வந்து ஆதரவு சொல்வது வழக்கமாகிவிட்டது. அதிலும் முதல்முறை வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.. பேரிகார்டுகள் அவர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. அதுபோலவே, இந்த முறையும் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால், எந்தவித பதற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் அதிக அளவில் வேலுமணி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொண்டர்களை தடுத்து நிறுத்தும் வகையில், பேரிகார்டுகளை ஆங்காங்கே வைத்து கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வேலுமணி வீட்டின் முன்பு பதற்றங்கள் காணப்படுகின்றன. சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடைபெறுகிறது.