இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது காணப்படவில்லை: இந்தியா

ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சனையில் இலங்கை அரசு எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்தது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் 51-வது அமர்வில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசியதாவது:-

ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது காணப்படவில்லை. இதற்கான இலங்கை அரசியல் முயற்சிகள் என்பது எதுவுமே இல்லை. இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தமான அதிகாரப் பகிர்வுக்குரியது. இதன்படி மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு, மாகாணசபைக்கு தேர்தல் என்பவை முக்கியமானவை. இவை அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் ஆனால் இலங்கை அரசு இதனை மேற்கொள்ளவில்லை. இத்தகைய அரசியல் தீர்வுகளைத்தான் முன்னெடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு.

மாகாணங்களுக்கு சுயாட்சி, தமிழர்களுக்கு அதிக அதிகாரப் பகிர்வு இவற்றை தொடர்ந்து இலங்கையிடம் இந்தியா வலியுறுத்துகிறது. ஆகையால் இந்த விவகாரத்தில் இலங்கை அரசு உடனடியான, நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை உருவாக்கித்தர வேண்டும். இலங்கையின் மாகாண சபைகளுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய தேர்தல்கள் மூலம் இலங்கை மக்கள் தங்களது எதிர்காலத்தை தேர்வு செய்ய முடியும். ஆகையால்தான் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு இந்திராமணி பாண்டே கூறினார்.

1987-ம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து இந்தியா – இலங்கை ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த 13-வது திருத்தமானது மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகிறது. இந்த திருத்தத்தின் கீழ், ஈழத் தமிழர்களின் தாயக நிலப் பகுதியில் இருந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபையாக உருவானது. பின்னர் 2007-ல் இந்த வடகிழக்கு மாகாணசபை மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாண சபை என பிரிக்கப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த 13-வது திருத்தம் அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறது.