மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட உள்ளார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் – அட்டர்னி ஜெனரல் பதவி என்பது அரசியல் சாசன பதவியாகும். இப்பதவியில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இருந்தவர் முகுல் ரோத்தகி. தமது பணிக் காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, போலி என்கவுண்ட்டர்கள் வழக்கு என பலவற்றில் ஆஜரானார். இவ்வழக்குகளில் முகுல் ரோத்தகி தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. 2017-ல் தமது பதவியை முகுல் ரோத்தகி ராஜினாமா செய்தார். இத்தனைக்கும் மத்திய அரசு பணி நீட்டிப்பு கொடுத்த போதும் அதனை நிராகரித்தவர் முகுல் ரோத்தகி.
இதனைத் தொடர்ந்து நாட்டின் 15-வது அட்டர்னி ஜெனரலாக 2017-ம் ஆண்டு ஜூலை 1-ல் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டுகால பதவிக் காலம் 2020-ம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது 91 வயதான தம்மை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கே.கே.வேணுகோபால் கேட்டுக் கொண்டார். ஆனால் மத்திய அரசு அவருக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்கியது. இருந்தபோதும் 2022-ம் ஆண்டு வரைதான் தாம் பணியில் இருப்பேன் எனவும் அப்போது கே.கே.வேணுகோபால் நிபந்தனை விதித்து பணி நீட்டிப்பை ஒப்புக் கொண்டார். தற்போது கே.கே.வேணுகோபாலின் பணி காலம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.