முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமின் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு!

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், ‘ஜாமின்’ நிபந்தனையை தளர்த்தி, அவர் தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக பதவி வகித்த போது, ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார்; மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி, தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி அளிக்குமாறு, ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவருடைய இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கலைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை புதிப்பித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.