பஞ்சாபில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்: ஆம் ஆத்மி

பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம் ரூ 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தாலும் அவ்வப்போது, எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றன. அண்மையில் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதை காட்டினார்.

இந்த நிலையில், பஞ்சாபில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட பாஜக முயற்சிப்பதாக ஆளும் ஆம் ஆத்மி கூறியிருப்பது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. சண்டிகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பல் சிங் சீமா பாஜக மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ”பாஜகவின் தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ -ஐ பஞ்சாப் பக்கம் திருப்பியுள்ளது. 7 முதல் 10 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் உள்ள சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 25 கோடி ரூபாய் தருவதாகவும், அமைச்சர் பொறுப்பு வழங்குவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். 70 கோடி ரூபாய் வரை தருவதாக எங்கள் எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து பிரிக்க மத்திய பாஜகவின் உத்தரவின் பேரில் இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் மூன்று முதல் 4 எம்.எல்.ஏக்களை அழைத்து வந்தால் 50 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியுள்ளனர்” என்றார்.

மேலும், 92 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும் ஆட்சியை நடத்தி வரும் பகவந்த்மன் அரசை எப்படி கவிழ்க்க முடியும் என்று ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கேட்டு இருக்கிறார். அதற்கு, பிற கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். வெறும் 35 எம்.எல்.ஏக்கள் வந்தால் போதும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர் என்று சீமா கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமா, ”மத்திய பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். பஞ்சாபிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடன் (பாஜகவுடன்) தொடர்பில் இருக்கலாம். பஞ்சாபில் 55 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 1,375 கோடி ரூபாயை செலவிட தயராக வைத்துள்ளது. டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு இருந்தது. அதேபோல், தற்போது பஞ்சாபிலும் ஜனநாயக படுகொலையை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டுகிறது. ஆனால் இது ஒருபோதும் நடக்காது” என்றார்.

அப்போது எந்ததெந்த எம்.எல்.ஏ.க்களை பாஜக தொடர்பு கொண்டது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைசர் சீமா, ”பல எம்.எல்.ஏ.க்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர். இது விசாரணைக்கு தகுந்த விவகாரம். எங்களின் சட்ட நிபுணர்கள் அணி இது குறித்து ஆலோசித்து வருகிறது. எனவே இப்போதைக்கு எம்.எல்.ஏக்களின் பெயர்களை வெளியிட முடியாது. வரும் காலத்தில் உரிய ஆவணங்களுடன் இதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.

ஆனால், ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ள பாஜக, ”மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மி அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே இது தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இதனால், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.