2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா!

இந்தியா இந்துக்கள் நாடு தான், இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. கிறிஸ்துவராக இல்லையென்றால், இஸ்லாமியராக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா எனக் கேள்வி எழுப்பினார். ஆ.ராசா பற்றி காணொளியை பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டதில் இருந்து, தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேமுதிகவின் 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. இதன்பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக, அதிமுக கட்சியில் மாபெரும் தலைவர்கள் இருந்தபோதே, தேமுதிக தொடங்கப்பட்டது. தற்போது விஜயகாந்த் உடல்நிலை காரணமாக தேமுதிக வளர்ச்சியில் சிறு தொய்வு இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ, அதனை நிச்சயம் அடைவோம். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது. தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்பின்னர் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படும். அதுமட்டுமல்லாமல் மண்டல மாநாடு, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அடுத்தடுத்து திட்டமிட்டு வருகிறோம். இப்போதைக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம். கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்தியா இந்துக்கள் நாடு தான். இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. தேமுதிகவை பொறுத்தவரை, ஜாதி மதம் உள்ளிட்டவற்றுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் ஒரே குலம் என்று தொடங்கப்பட்ட கட்சி. எங்கள் கட்சி வரலாற்றை நீங்கள் பார்த்தால், எந்த கட்சியில் இருந்தோ, எந்த ஜாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ, மொழியாலோ உருவான கட்சி அல்ல. அதனால் தேமுதிக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.