வாக்குறுதியை நிறைவேற்றாததே ‘திராவிட மாடல்’ ஆட்சி: ஜி.கே.வாசன்

‘தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், மாறாக மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கும் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி,’ என்று த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது தி.மு.க அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. சொத்து வரி, மின் கட்டண உயர்வு என மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். இதனை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் செப்.19ல் சேலத்தில் போராட்டம் நடத்த உள்ளோம்.

காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. ராகுல் நடைபயணத்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த பலனும் இல்லை. மீனவர்களை இலங்கை அரசு விடுவித்ததை வரவேற்கிறோம். மீனவர்கள் அச்சமின்றி தொழில் செய்யும் சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் போலீசாரின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் ஆன்-லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக் கவேண்டும். கொரோனா கால பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகும் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினார்.