கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

கோவா மாநிலத்தில் அதிரடி திருப்பமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் இன்று ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்தனர்.

கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜகவுக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் கூட்டணி மற்றும் சுயேச்சைகள் 5 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், மொத்தம் உள்ள 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 8 எம்எல்ஏக்கள் இன்று, பாஜகவில் இணைந்தனர். மூத்தத் தலைவர்களான திகம்பர் காமத் மற்றும் மைக்கேல் லோபோ உள்ளிட்டோர், கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

இது குறித்து கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் கூறுகையில், “பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்களை வரவேற்கிறேன். காங்கிரஸ் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ துவங்கியது. ஆனால், ‘காங்கிரஸ் சோடோ யாத்ரா’ கோவாவில் துவங்கி உள்ளது என நினைக்கிறேன். நாடு முழுவதும் மக்கள் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்களின் இந்த கட்சித் தாவல் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.