தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், திமுகவுடன் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். பல கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முழு முடக்கத்திற்கு பிறகு தற்போதுதான் பொருளாதாரம் மெல்ல முன்னேறி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் வாரம் ஒருமுறை என போராட்டங்கள் நடைபெறும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வகையில் 4 கட்ட போராட்டங்கள் நடைபெறும்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க பெரிய அளவில் சதி நடைபெறுகிறது. இவற்றை தடுக்க டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளோம். மேலும், இமானுவேல் சேகரன் நினைவு இடத்தை பராமரிக்கும் பொறுப்பு மற்றும் விழா நடைபெறும் பொறுப்பு ஆகியவற்றை புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களுடைய நேரடி பயன்பாட்டுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை. சொன்னவை எவையும் நடக்கவில்லை. மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறினால், ஆட்சியை எங்களால் நடத்த முடியவில்லை எனக் கூறி, ஆளும் திமுக அரசு, ஆட்சியை விட்டு விலக வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.