சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி சேட்டையன் தொப்பு பகுதியில் அம்பேத்கர் நூலகம் ஒன்றினை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

வருகிற 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழிகிறது.

மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீண்ட, நெடிய விளக்கத்தை தந்திருக்கிறார். அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை தந்திருக்கிறார். தவிர்க்க இயலாத நிலையில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் சீரமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைக்கிறது. ஜனநாயக உணர்வை மதிக்கின்ற வகையில், சனாதன சக்திக்கு இடம் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக கூட்டணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பெரியார் பெயரில் உணவகம் அமைக்கக் கூடாது என்று கோவையில் இந்து முன்னணியினர் உணவகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். பெரியார் மண்ணில் இதுபோன்ற எதிர்ப்புகள் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் இங்கு சனாதன சக்திகள் அந்த அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்துவிட, திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற வன்முறையை தூண்டும் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி நடை பயணம் நல்ல நோக்கம், நல்ல முயற்சி. மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பலை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதற்காக ஒரு அரசியல் பயணம். இந்த பயணம் கட்சி அடிப்படையில் அணுகாமல் சனாதன சக்தியிடம் இருந்து அரசியலமைப்பு சட்டத்தையும், தேசத்தையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என சுட்டி காட்டுகிறேன். இந்தப் பயணம் சனாதான சக்திகளை தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகள் ஐக்கியப்படுத்த பெரும் பயனாக அமையும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.