ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. இதில் முழு உறுப்பினர்களான சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளும், பின்னர் 2017ல் முழு உறுப்பு நாடுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன.

இந்த நிலையில் உஸ்பெஸ்கிதானில் நடைபெற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, ” இந்தியாவும் ரஷியாவும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா – ரஷ்யா இரு நாட்டு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று நரேந்திர மோடி கூறினார்.

பின்னர் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளைய பிறந்தநாளினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்தினை தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவை நாங்கள் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையமாக கொண்ட வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று நாடு முழுவதும் 70,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், 100 யூனிகார்ன் ($1 பில்லியனுக்கு அதிகமான முதலீட்டில் உருவாகும் தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்) நிறுவனங்களும் உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு பாரம்பரிய மருத்துவத்திற்காக சர்வதேச மையம் உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எனவே பாரம்பரிய மருந்துகளுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற முயற்சிகளை இந்தியா எடுக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.