உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் எங்கேனும் போர் நடந்தால், அதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் போப்பாக பதவி வகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால், போர் பிரான்சிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கைவசம் வந்துவிட்டன. இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே, தங்கள் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது கடுமையான பொருளதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதேபோல, ரஷ்யாவுக்கு எதிராக போரிட ஏதுவாக, உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிக அளவில் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. மிகவும் வெளிப்படையாக உக்ரைனுக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகளால் தான், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகள் வழங்குவது குறித்து போப் பிரான்சிஸிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-
உக்ரைனுக்கு பல நாடுகள் ஆயுதங்களை வழங்குவது என்பது அந்நாடுகளின் அரசியல் முடிவுகள் ஆகும். இதில் நாம் தலையிட முடியாது. அதே நேரத்தில், இந்த ஆயுத உதவிகள் வழங்கப்படுவதால் தான், உக்ரைனால் தன்னை தற்காத்துக் கொள்ள முடிகிறது. ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அதை பார்த்தால் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஒரு அடக்குமுறைக்கு எதிராக தற்காப்பை கையாள்வது சட்டப்படி சரியானதே. மேலும், அது அந்நாட்டின் அன்பையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.