லண்டனில் வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது.
சமீபத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரிட்டன் பார்லி.,யின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.
சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரிட்டனை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தை சேர்ந்த 5 எம்பி.க்கள் உள்பட 9 தனிநபர்கள் மற்றும் 4 அறக்கட்டளை அமைப்புகளின் மீது சீனா பொருளாதார தடை விதித்தது.
இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள் பார்லி., வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.