தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்

தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்ததினமான நேற்று சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து சமூக நீதி உறுதிமொழியும் ஏற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

செப்டம்பர் 17 சமூக நீதி ஆளாக கொண்டாடப்படுகிறது. சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வருகிற செப்டம்பர் 28 மதுரையிலும் அக்டோபர் 8 கோவையிலும் காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது. பெரியார் அம்பேத்கர் மாமனிதர்களின் கனவை நிஜமாக்குவதற்கும், இந்திய அரசியலமைப்பின் மாண்புகளை பாதுகாப்பதற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது. சாதியவாத சக்திகள் சனாதன சக்திகள் சாதி அடிப்படையிலான முரண்களை கூறுகின்றனர். மோதலில் ஈடுபடுகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் பெட்டி கடைகளில் மிட்டாய் வாங்க சென்றபோது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் உங்கள் ஊரை சார்ந்தவர்களுக்கு பொருள் தர மாட்டோம் என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது விரைவில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஒரே ஆண்டில் எட்டு தலித்துகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இது தொடர்பாக வேண்டுகோள் வைக்கின்றோம். இதுபோன்று வன்கொடுமைகளை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டம் அருகே தலித்துகள் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.

திருவள்ளுவருக்கு காவி உடை பொருத்தியுள்ளனர். அம்பேத்கருக்கு காவியை பூச நினைக்கிறார்கள். மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள். இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும்தான் இருக்கும். தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது. இங்கிருந்து அவர்கள் விரட்டப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.