தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது: விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் சாரல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு சாதனை படைத்த நபர்களுக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்கி பாராட்டினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எச்1 என்1 என்ற பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மறைப்பது வேதனைக்குரியது.

பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கவனமாக இருக்க வேண்டும். வேகமாக பரவக்கூடிய காய்ச்சலில் பன்றி காய்ச்சலும் ஒன்று. விழிப்புணர்வோடு பொதுமக்கள் இருக்க வேண்டும். சென்னை எழும்பூர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அதிகளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை சிகிச்சை பெறுவதற்கு உண்டான படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுதவிர டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலும் பரவி வருகிறது.

தமிழகத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது என்பதை பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களே குற்றம்சாட்டி வருகின்றனர். அமைச்சர் இதனை மறுப்பதை விடுத்து மக்கள் நலன், குழந்தைகள் நலன் கருதி உடனடியாக மருந்து மாத்திரைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் அதிக காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுமுறை விட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி வருகிறார். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அக்கறையோடு அணுக வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. விடுமுறை என்பது தீர்வு அல்ல. காய்ச்சல் பரவுவதை பொறுத்து முடிவு செய்யலாம் . உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் காய்ச்சல் வார்டு உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

அதேபோல் மர்ம காய்ச்சல் என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்து விட முடியாது. நான் மருத்துவ துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்ற பல்வேறு சவால்களை சந்தித்து சீர் செய்துள்ளேன். கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டு காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்துள்ளோம். அதேபோல் தற்போதும் பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.