புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே சமூக நீதிக்காக, சமத்துவ சமூகத்துக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கட்டி வரும் புதிய நாடாளுமன்றத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும். இந்தியாவுக்கு வெளியில் காந்தியும், அம்பேத்கரும் தான் அடையாளம். அதனால் தான் அவரின் பெயரை வைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை என்று தெரிவித்தார்.
தென்காசி சாதிய தீண்டாமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், பெரியார் மண், சமூக நீதி பற்றி பேசுவோரிடம் சாதிய தீண்டாமை பற்றி கேள்வி கேட்க வேண்டும். இந்த சம்பவம் ஒரு படிப்பினை. சாதி என்னும் நஞ்சு நமது மனதில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சிறுவயதில் இருந்தே பெரியாரின் கருத்துக்களில் பயணித்துள்ளேன். உலகத் தலைவராக பெரியாரை நிறுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி தான். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறினார்.
அதேபோல், மாணவர்களுக்கு காலை உணவு அளித்து படிக்க வைப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் அரசியல் லாபத்திற்காக செய்வதை வெறுக்கிறேன். காமராசர் சத்துணவு அளித்தது உளமார செய்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், உணவிலேயே கைகளை கழுவினார். இது வெறும் விளம்பரம் தான். ஆனால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் தரம் அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.