9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல். பெரிய அளவில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போல மாய தோற்றம் உண்டாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியமான 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் அரசின் மீதான கோபத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காய்ச்சல் பரவி வருவதால் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும். குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.