தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்த நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு உறுதி செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்க சட்டசபையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக 2 முறை இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை அரசு ஒரு போதும் எடுக்காது. இந்த இடத்தை சீர் செய்து விரைவில் பணியை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் இதற்கான நில அளவை பணி தொடங்கப்படுகிறது. 66 ஏக்கரில் மலையில் இருந்து தண்ணீர் வரும் ஒரு குளமும் உள்ளது. அந்த குளத்தையும் பராமரித்து ஜல்லிக்கட்டு அரங்கில் கலந்து கொள்ள வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மலையில் இருந்து வரும் தண்ணீரை எந்த வகையிலும் தடுக்க மாட்டோம். அந்த குளத்தின் பாசன பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த பணிக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். 3 பேர் நிச்சயம் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த டெண்டர் ரத்தாகிவிடும். ஒப்பந்ததாரர்கள் விரைவில் இந்த பணியை முடித்து தரும் வகையில் வர வேண்டும். அரசு பணிகளை பொறுத்தவரை 18 மாதங்கள், 24 மாதங்கள் என்று டெண்டர் கொடுக்கப்படுகிறது. சில ஒப்பந்ததாரர்கள் 12 மாதங்களிலேயே பணிகளை முடித்து விடுகிறார்கள். சிலர் நியமிக்கப்பட்ட காலத்தையும் கடந்து பணியை முடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டீசு கொடுப்பதும், அபராதம் விதிக்கவும் தான் முடிகிறது. இந்த பணியை பொறுத்தவரை விரைந்து முடிக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வருகிற 2024-க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.