குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால், வதோதராவில் இன்று பேசியதாவது:-

குஜராத்தில் பல நாள்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத்தில் ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே அமல்படுத்துவோம். நாங்கள் பணவீக்கத்தை ஒழித்து, மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவோம் என்றும், மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்போம் என்றும் வாக்குறுதி அளிக்கிறோம்.

பாஜக மீது பரிதாபப்படுகிறேன். பாஜகவை போன்று உபயோகம் இல்லாத கட்சியை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. இந்த கட்சிகள் 75 ஆண்டுகளில் செய்யாததை பகவந்த் மான் வெறும் 6 மாதங்களில் செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வந்திறங்கியபோது, மோடி மோடி என்ற கோஷங்களுடன் அவர் வரவேற்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

வதோதரா நகரில் உள்ள விமான நிலையத்தில் கெஜ்ரிவால் இன்று வந்திறங்கினார். அவரை வரவேற்க தொண்டர்கள் காத்திருந்தனர். எனினும், குஜராத்துக்கு வந்த கெஜ்ரிவாலை வரவேற்கும் வகையில் எழுந்த வாழ்த்து கோஷத்தில் மோடி மோடி என்ற குரல் முதலில் எழுப்பப்பட்டது. அதன்பின்னர் கெஜ்ரிவால் கெஜ்ரிவால் என்ற கோஷங்களும் முழங்கின. தனது அரசியல் எதிரி மற்றும் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்து வரவேற்றபோதும், கெஜ்ரிவால் புன்னகையுடன் கடந்து பத்திரிகையாளர்களை நோக்கி சென்றார். எனினும், அந்த பகுதியில் அவர் எதுவும் பேசவில்லை.

இந்த சம்பவம் பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த பிரீத்தி காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மோடியின் குஜராத்தில், கெஜ்ரிவாலுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.