காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. சாதாரண காய்ச்சலை போல் அல்லாமல் எச்1என்1 காய்ச்சலாக இருப்பதால் குணமாக 5 முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 25 கூடுதல் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பரவி வரும் நிலையில் நாளை சிறப்பு முகாமை மருத்துவத்துறை நடத்துகிறது. காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் மக்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பரிசோதனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் முதல் ஒரே இடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால் அங்கு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும். பருவ நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். தமிழ்நாட்டில் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1166 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.