அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: விளாடிமிர் புடின்!

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

ரஷ்ய நாட்டு மக்களுக்கு டிவி மூலம் அதிபர் புடின் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

ரஷ்யா ராணுவ வீரர்களை உடனடியாக அணி திரட்ட உள்ளோம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாட்டு ராணுவத்திற்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது. நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்தையும் பயன்படுத்துவேன். இதனை வெற்று பேச்சாக எடுத்து கொள்ளக்கூடாது.

மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பிரிக்கவும், பலவீனப்படுத்தி அழிக்கவும் முயற்சிக்கின்றனர். அந்நாடுகள் கடந்த 1991ல் ரஷ்யாவை பிரித்ததாகவும், தற்போதும் அதேபோன்று பிரிக்க நேரம் வந்துவிட்டதாக பேசுகின்றனர். ரஷ்யாவை பல நாடுகளாக பிரிக்க வேண்டும் என்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையை கேட்கும் உக்ரைன், அந்நிய கூலிப்படையினர், நாட்டவர்கள், நேடோ பயிற்சி பெற்ற வெளிநாட்டு ராணுவ வீரர்களை அழைத்து வருகிறது. இன்று நமது வீரர்கள், ஆயிரம் கி.மீ., தூர எல்லையில் போரிட்டு வருகிறது. ஒட்டுமொத்த மேற்கத்திய ராணுவ இயந்திரங்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றன. ரஷ்யாவிடம் அனைத்து வகையான ஆயுதங்கள் உள்ளன. அவை நேடோ வைத்திருக்கும் ஆயுதங்களை விட நவீனரகம் வாய்ந்தவை. நமது நாட்டின் பிராந்திய ஒற்றுமைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு நம்மிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இந்த மிரட்டலை உதாசீனப்படுத்த வேண்டாம். எங்களுக்கு அணுஆயுத மிரட்டல் விடும் அனைவரும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதே இந்த போரின் நோக்கம் ஆகும். இவ்வாறு புடின் பேசினார்.

புடின் பேசியதைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சொய்ஜூ கூறுகையில், பகுதி ரீதியாக 3 லட்சம் ராணுவ வீரர்கள் அணி திரட்டப்படுவார்கள். உக்ரைன் மீதான தாக்குதலின் 5,937 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தரப்பில், பலி எண்ணிக்கையானது இது போல் 10 மடங்கு இருக்கும். 61,207 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.

உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் கூறுகையில், புடின் உரை மூலம் ரஷ்யா பலவீனமடைந்து வருவது வெளிப்படுவதாகவும், உக்ரைன் பகுதிகளை, ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியை ஏற்று கொள்ள மாட்டோம் என்றார்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய வீரர்கள் படை திரட்டப்படுவது என்பது, படையெடுப்பு தோல்வி அடைந்ததை காட்டுவதாகவும், எந்தளவு மிரட்டல் விடுத்தாலும் போரில் தோல்வி அடைந்ததை ரஷ்யா மறைக்க முடியாது. உக்ரைன் வெற்றி பெற்று வருகிறது. சர்வதேச சமூகம் ஒற்றுமையாக உள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா தனிமைபடுத்தப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளது.

முன்னதாக, தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரனிய பகுதிகளில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ரஷ்யாவின் அறிவிப்புக்கு மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லூஹான்ஸ்க், டான்டேஸ்க், சேர்சன் மற்றும் சாப்பரீஷா உள்ளிட்டவற்றின் நிர்வாகங்கள் வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் துவங்கும் என்று அறிவித்துள்ளன. இத்தகைய போலியான தேர்தல்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.