தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா?: சீமான் கண்டனம்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனு மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பிட்ட ஒரு இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். தமிழகத்தில் அதுவும் திமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படுவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளா அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல!

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.