கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என்று, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை பொள்ளாச்சியில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் காரைக்குடியில் இருக்கும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்புத்தூர் சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த குண்டை வீசியவர்கள் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி உள்ளன. மது பாட்டலில் பெட்ரோலை நிரப்பி அதை வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் குண்டு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்தான் வேறு சில இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. அதன்படி கோவையில் மாருதி என்ற துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த கடையின் நிர்வாகி பாஜக கட்சிக்காரர் என்று கூறப்படுகிறது. ஒப்பணக்கார வீதியில் இந்த கடை உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது போக இன்று காலை 100 அடி சாலையில் உள்ள வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த கடை ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை என்று கூறப்படுகிறது. இது போக இந்து முன்னணியை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் ஆட்டோ சேதம் செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடை ஒன்றின் மீதும் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அங்கு இருந்த கார் ஒன்றும் சேதம் செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது போக பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குண்டுகள் எதுவும் பெரும்பாலும் வெடிக்கவில்லை. இதன் காரணமாக உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இப்படி அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஏதாவது திட்டமிட்ட சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஏதாவது கலவரத்தை உருவாக்கும் எண்ணத்தோடு இந்த சம்பவங்கள் நடக்கின்றவா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றன. இதையடுத்து தற்போது அங்கு தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவை , ஈரோடு முழுக்க மொத்தம் 6 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 600 வீரர்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரம் எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவை, ஈரோட்டில் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சேலத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.