ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த போராட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. தற்போது வரை நடைபெற்ற வன்முறைகளில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 15ம் தேதி குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) எனும் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோதல் கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காட்டு தீயை போல நாடு முழுவதும் பரவியுள்ளது. சுமார் 50 நகரங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. அதேபோல போராட்டக்காரர்களின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் ஈரானை கடந்து கனடா வரை பரவியுள்ள நிலையில், தற்போது ஐநா பொதுச் செயலாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தங்களது பலத்தை ஈரான் பாதுகாப்புப் படையினர் காட்டக்கூடாது. இவ்வாறு தேவையற்ற அதீத அடக்குமுறையின் மூலம் ஏற்படும் வன்முறை குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். கருத்து சுதந்திரம், சங்கம் அமைத்து செயல்படும் உரிமை ஆகியவற்றை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மனித உரிமை அதேபோல, போராட்டம் தீவிரமடைவதை தடுக்க அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பிற மனித உரிமை மீறல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு ஈரானிய அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது” என்று ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கடுமையான இணைய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. பல பகுதிகளில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் தற்போது கனடாவரை நீடித்துள்ளது. பெண்கள் பலர் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் வருகின்றனர். பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இணைய வசதி துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே எலான் மஸ்கின் ‘ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை ஈரானில் ஏற்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில், “ஈரான் அரசாங்கத்தின் தடைகளை எதிர்த்து ஈரானிய மக்களுக்கு இணைய சுதந்திரம் வழங்கவும், அவர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். இந்த டிவிட்டுக்கு பதிலளித்த எலான் மஸ்க் ‘Activating Starlink’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் ஸ்டார்லிங்க் தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.