சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12-ந் தேதி ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளை மறுநாள் 26-ந் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல், மிகக்குறைந்த கால அவகாசத்தில் கருத்துகளைக் கோருவது நியாயமற்றதாகும். சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு, தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து இரு மாதம் காலக்கெடு வழங்க வேண்டும்.
ஐநா வாழ்விட அமைப்பின் வழிகாட்டி கொள்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சென்னை மாநகரம் முழுவதும், அனைத்து வடிவங்களிலும் விளம்பரம் செய்ய வேண்டும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளம்பரம் செய்ததைப் போன்று இதற்கும் விளம்பரம் செய்ய வேண்டும். சென்னை நகரில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுடன் சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். குடிசைப்பகுதி மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மீனவர்கள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படுவோருடன் விரிவாக கலந்தாலோசிக்க வேண்டும். மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய சென்னை மாநகருக்கான காலநிலை செயல்திட்டத்தை உருவாக்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.