சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வீட்டுக் காவல்?

சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் விமானச் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அதிவிரைவு ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீன அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். சீனாவில் ‛சீன கம்யூனிஸ்ட்’ என்ற கட்சி மட்டும் உள்ளது. ஒற்றை ஆட்சி முறை என்பதால் இந்த கட்சியில் உள்ளவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். இந்நிலையில் தற்போது அந்த கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள ஜி ஜின்பிங் தான் நாட்டின் அதிபராக உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. சீனாவை பொறுத்தமட்டில் ஒரு நபர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்கும் முடியும். இதனால் 2 வது முறையாக உள்ள அதிபராக உள்ள ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவுக்கு வர உள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து அதிபராக நீடிக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இதனால் அவரது கட்சியிலேயே அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ராணுவம் உள்பட ஒட்டுமொத்த சீனாவின் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள ஜி ஜின்பிங்கை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதனால் அவர்கள் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது சீனா தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது சீனாவில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று செப்டம்பர் 16ல் சீனா திரும்பிய ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதோடு விமான சேவைகள் முடங்கி உள்ளதாகவும், தலைநகர் பெய்ஜிங்கில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், படங்கள் வெளியாகி உள்ளன. இது அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இதனால் சீனாவில் என்ன நடக்கிறது? என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த துவங்கி உள்ளன.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சீனா நாட்டின் நிலை பற்றி டுவிட் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும். ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? ஜி ஜின்பிங் சமர்கண்டில் இருந்தபோது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் இராணுவ பொறுப்பில் இருந்து அவரை நீக்கியதாக கருதப்படுகிறது. பின்னர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார் என வதந்தி பரவுகிறது” என கூறியுள்ளார்.

இதற்கிடையே தான் சமீபத்தில் சீனாவில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், நான்கு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஊழல் தொடர்பான புகாரில் அவர்களுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜி ஜின்பிங்கிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் என கூறப்படுகிறது. தற்போது அவர்கள் தான் இந்த வகையில் வதந்திகளை பரப்புவதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. இருப்பினும் சீனாவில் நிலவும் சூழல் பற்றிய உண்மை நிலவரம் இன்னும் மர்மமாக தான் உள்ளது.

இதற்கிடையே சீனாவில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கி உள்ளது. அங்குள்ள அனைத்து விமானங்களும் காரணங்கள் சொல்லப்படாமல் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சுமார் 9000க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் நட்டும் 622 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோல ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 652 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

விமானங்கள் மட்டுமின்றி அதிவிரைவு ரயில் போக்குவரத்தும் அங்கு முடங்கி உள்ளது. அனைத்து அதிவிரைவு ரயில் டிக்கெட்களும் கேன்சல் செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீன மக்கள் மட்டுமின்றி, அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்

இப்படி சீனாவில் குறித்து இணையத்தில் பரவும் தகவல்கள் எதுவும் நல்லதாக இல்லை. அதேநேரம் இப்படிப் பரவும் தகவல்கள் குறித்து சீன ராணுவமோ அல்லது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் எவ்வித விளக்கத்தையும் வெளியிடவில்லை.