உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு சிறை: அதிபர் புதின்

உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும். பின்பற்ற மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகளுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் புதினின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், உக்ரைனிடம் ரஷ்ய வீரர்கள் சரண் அடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு சரண் அடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்.